சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நேற்று நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்தது. அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ. 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். இந்த நிகழ்ச்சிக்காக நேற்று காலை பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் வாயிலாக செல்ல இருந்தார். ஆனால், மோசமான வானிலை கரணமாக மோடியின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.
ஆனால்,போரட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன கன்வாய் 15- 20 நிமிடங்கள் அப்படியே நின்றது. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடி நடைபெற்றதையடுத்து மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
உடனடியாக பதிண்டா விமான நிலையத்திற்கே பிரதமர் மோடி திரும்பிச்சென்றார். பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி பாதியிலேயே திரும்பி வந்த விவகாரம் தொடர்பாக பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகாய்ட் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமரின் பயணம் ரத்தானது விவாத பொருளாக மாறி உள்ளது.மறுபக்கம், 'காலி இருக்கைகளை பார்த்துவிட்டு தான் பிரதமர் கூட்டத்தை ரத்து செய்தார்' என்று பஞ்சாப் முதல்-மந்திரி கூறியுள்ளார்.
இப்போது இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. பாதுகாப்பு குறைபாடு தான் காரணமா அல்லது விவசாயிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்களா என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.