புதுடெல்லி,
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் இறுதிக் காலத்தில் பாகிஸ்தானின் கர்தார்பூரில் வாழ்ந்து மறைந்தார். அவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தர்பார் சாகிப் குருத்வாரா, சீக்கியர்களின் புனித தலம் ஆகும். கடந்த 18-ம் தேதி திறக்கப்பட்டுள்ள கர்தார்பூர் சாலை வழியாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து தர்பார் சாகிப் குருத்வாராவில் வழிபாடு நடத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வர்த்தகம் நடைபெற வேண்டும். நாம் எல்லைகளை திறக்க வேண்டும். பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் மேற்கொண்ட முயற்சியால்தான் கர்தார்பூர் சாலை திறக்கப்பட்டது. இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இம்ரான் கான் எனது மூத்த சகோதரர் போன்றவர் என்றார்.
இந்நிலையில் பாஜக எம்.பி.கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் நவ்ஜோத் சிங் சித்து முதலில் தனது பிள்ளைகளை எல்லைக்கு காவலுக்கு அனுப்ப வேண்டும். அவரின் குழந்தைகள் ராணுவத்தில் பணியாற்றுகிறார்களா. அவ்வாறு அனுப்பி வைத்துவிட்டு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மூத்த சகோதரர் என அழைக்கலாம்என கடுமையாக சாடியுள்ளார்.