அயோத்தி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள காசிராம் காலனியில் நேற்று மாலை திடீரென அடுத்தடுத்து 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதில் ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீராம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு வெடிகுண்டுகள் நிரப்பிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அதனை செயலிழக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்ததாலும், வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாலும் அயோத்தியில் பதற்றம் நீடிக்கிறது. இதற்கிடையே காதல் விவகாரமே குண்டு வெடிப்புக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.