தேசிய செய்திகள்

7 பேர் விடுதலை குறித்து எடுத்த முடிவை தெரிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலை குறித்து எடுத்த முடிவை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர், பேரறிவாளன். இவர், சுப்ரீம் கோர்ட்டில் 2016-ம் ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக் கப்பட்ட பேட்டரி , தான் வாங்கி கொடுத்தது என்ற குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில், சி.பி.ஐ. தலைமையிலான பல்தரப்பு கண்காணிப்பு முகமை (எம்.டி.எம்.ஏ.) நடத்தி வருகிற விசாரணை முடிகிற வரையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கோரி உள்ளார்.

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 14-ந் தேதி நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பெல்ட் வெடிகுண்டு குறித்த சி.பி.ஐ. அறிக்கை மிகவும் பழையதாக இருக்கிறது; தற்போதைய நிலவரம் குறித்து எதுவும் சேர்க்கப்படவில்லை. எனவே புதிதாக, தற்போதைய நிலவரத்தையும், சமீபத்தில் நடைபெற்ற விசாரணைகள் குறித்தும் விரிவான அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் பேரறிவாளன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.

பேரறிவாளன் தரப்பில் மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், வக்கீல்கள் கவுதமன், பிரபு ராமசுப்பிரமணியம் ஆகியோர் ஆஜரானார்கள். சி.பி.ஐ. தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜரானார்.

விசாரணை தொடங்கியதும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்திடம் நீதிபதிகள், 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த நிலவர அறிக்கைக்கும், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தாக்கல் செய்த நிலவர அறிக்கைக்கும் இடையே என்ன வித்தியாசம் உள்ளது என்பதை உங்களால் சொல்ல முடியுமா? எந்த வித்தியாசமும் இல்லை என கூறினர்.

அதற்கு பிங்கி ஆனந்த், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எழுதப்பட்ட கடிதங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை. மீண்டும் கடிதங்கள் எழுதப்படுகின்றன என்று கூறினார்.

தொடர்ந்து பேரறிவாளன் தரப்பில் மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் வாதிட்டார்.

அவர் தனது வாதத்தில், பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். பெல்ட் வெடிகுண்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் விசாரணை முடிவடையும் வரை அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து அவரை விடுவிக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசும், கவர்னரும் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்ட நிலையிலும் அந்த உத்தரவின் மீது தமிழக அரசு முடிவு எடுத்தும், அது கவர்னரிடம் நிலுவையில் உள்ளது என்று கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதின் அடிப்படையில், அரசியல் சாசனம் பிரிவு 161-ன்கீழ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக எடுத்த முடிவை 2 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். (அரசியல் சாசனத்தின் பிரிவு 161, குற்றவாளி என கோர்ட்டால் தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒருவரை மன்னிக்க கவர்னருக்கு அதிகாரம் வழங்கி உள்ளது.)

7 பேரின் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. அது குறித்து இதுவரை கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை நீதிபதிகள் 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு