புதுடெல்லி,
பீகாரில் காங்கிரஸ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடனான மகா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகுவது என்ற முடிவுக்கு சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார்.
எனினும் அதனை புறந்தள்ளி விட்டு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகி பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து கொண்டது.
நாடாளுமன்ற மேலவையில் அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் சரத் யாதவ் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவரான சரத் யாதவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், பீகார் அரசு மற்றும் இந்து நலனுக்கு எதிராக எதுவும் பேச கூடாது. அப்படி இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதில், தேச விரோத சக்திகளுடன் இணைந்து ஒரு பெரிய தவறை செய்து விட்டீர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நாடாளுமன்ற மேலவை இல்லத்திற்கு சமீபத்தில் வந்த இந்த கடிதம் பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளோம் என அவரது அலுவலக தகவல் தெரிவிக்கின்றது.