புதுடெல்லி,
2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா இப்போது உள்ள பலத்துடன் வெற்றியை பெற்றால், நம்முடைய ஜனநாயகம் பெரும் அழிவை எதிர்கொள்ளும். இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியது சர்ச்சையாகியது.
சசிதரூர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜனதா, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே சசிதரூர் தன்னுடைய கருத்தில் ஸ்திரமாக இருப்பதை தெரிவிக்கும் வகையில் இந்து பாகிஸ்தான் என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று அதற்கான விளக்கத்தையும் கூறினார். பா.ஜனதாவின் பார்வைக்கு நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அவசியத்தை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்கனவே பேசியதைதான் மறுபடியும் கூறியுள்ளேன். அவர்களுக்கு இந்து ராஷ்டிராவை உருவாக்க வேண்டும் என்ற ஐடியா இனி கிடையாது என்றால் அதனை ஒப்புக்கொள்ளட்டும். இப்போது அவர்கள் கூறியதனை நான் நினைவுப்படுத்தியதற்கு நான் எப்படி மன்னிப்பு கேட்க முடியும்? என்று பதில் கேள்வியை எழுப்பினார் சசிதரூர். இதற்கிடையே வார்த்தையில் கவனம் தேவையென காங்கிரஸ் அவரிடம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியது.
அலுவலகம் மீது தாக்குதல்
இந்து பாகிஸ்தான் என்ற கருத்து மோதலுக்கு மத்தியில் திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது, இது தொடர்பாக விசாரித்து வரும் போலீஸ் 5 பேரை கைது செய்தது. தொடர்ந்து சசிதரூருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜனதா இளைஞர் அணியினர், பாகிஸ்தானுக்கு செல்லவும் என கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.
சசிதரூர் காட்டம்
இப்போது பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்ற கோஷத்திற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், இந்து மதத்தில் தலிபானை தொடங்கியுள்ளார்கள்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசிய சசிதரூர், பாரதீய ஜனதாவின் இளைஞர் அணியினர் நான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று கோஷம் எழுப்புகிறார்கள். அவர்களை போன்ற இந்துவாக இல்லாத காரணத்திற்காக என்னை இந்த நாட்டில் இருக்க கூடாது என்று முடிவு எடுக்கும் உரிமையை அவர்களுக்கு கொடுத்தது யார்? அவர்கள் இந்து மதத்தில் தலிபானை தொடங்கியுள்ளார்கள்? என காட்டமாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.