தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்கு பிறகு பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன்

ஷீனா போரா கொலை வழக்கில் பீட்டர் முகர்ஜிக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மும்பை,

மும்பையை சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்தவர் பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி. இவர்கள் இருவரும் மறுமணம் செய்து கொண்டவர்கள். இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, 3-வது கணவர் பீட்டர் முகர்ஜி, கார் டிரைவர் ஷியாம்வர் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை ஷீனா போரா முறைதவறி காதலித்ததால், இந்த கொடூர கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பீட்டர் முகர்ஜி உடந்தையாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

கொலை வழக்கில் கைதான அனைவரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு பீட்டர் முகர்ஜி மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி நிதின் சாம்ரே முன்னிலையில் நடந்தது. விசாரணை நிறைவில், பீட்டர் முகர்ஜிக்கு ரூ.2 லட்சம் பிணைத்தொகையில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இது தொடர்பாக நீதிபதி தனது உத்தரவில், பீட்டர் முகர்ஜி குற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கான முகாந்திரம் இல்லை. ஷீனா போரா கொலை நடந்த போது அவர் இந்தியாவில் இல்லை. மற்ற குற்றவாளிகள் கைதாகி 6 மாதத்துக்கு பிறகு பீட்டர் முகர்ஜி கைது செய்யப்பட்டு குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு உள்ளார். அவர் 4 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். அண்மையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலைகள் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் பாஸ்போர்ட்டை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். ஜாமீன் காலத்தில் பீட்டர் முகர்ஜி தனது மகள் நிதி, மகன் ராகுல் முகர்ஜி மற்றும் ஷீனா போரா கொலை வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை தொடர்பு கொள்ளக் கூடாதுஇவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.

இதையடுத்து பீட்டர் முகர்ஜியின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக அவருக்கான ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பீட்டர் முகர்ஜியின் ஜாமீனை 6 வாரத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்த கொலை வழக்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பீட்டர் முகர்ஜி, இந்திராணி தம்பதியர் சிறையில் இருந்தபடியே விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை