தேசிய செய்திகள்

பிரவீன் தொகாடியாவின் குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித்ஷா பதில் அளிக்கவேண்டும் சிவசேனா வலியுறுத்தல்

பிரவீன் தொகாடியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா பதில் அளிக்கவேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. #PravinTogadia #ShivSena

தினத்தந்தி

மும்பை,

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவரான பிரவீண் தொகாடியா கடந்த 2015ம் ஆண்டில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான் போலீசார் 15-ம் தேதி காலை அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் தொகாடியா வீட்டில் இல்லை. இதனால் போலீசார் திரும்பி சென்றனர். அவருடைய ஆதரவாளர்கள் தொகாடியா கைது செய்யப்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. போலீஸ் இல்லையென மறுத்தது. இதனையடுத்து காணாமல் போன தொகாடியாவை தேடுவதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

11 மணியளவில் ஆட்டோ ஒன்றில் கிளம்பி சென்றபின் அவரை காணவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மறுநாள் காலையில் மருத்துவமனை ஒன்றில் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனையடுத்து பேசிய அவர், ராமர் கோவில் விவகாரத்தில் என்னுடைய குரலை ஒடுக்கவும், என்னை கொல்லவும் சதிதிட்டம் நடக்கிறது, என குற்றம் சாட்டினார்.

இந்துக்களுக்காக நான் குரல் எழுப்பி வருகின்றேன். ராமர் கோவில், பசுவதைக்கு தடை விதித்து சட்டம் ஏற்றுதல், காஷ்மீர் இந்துக்கள் பிரச்சனையை உடனடியாக சரிசெய்தல், விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை ஆகிய விவகாரங்களில் என்னுடைய குரலை எழுப்பி வருகின்றேன். ஆனால் என்னுடைய குரலை ஒடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழைய வழக்குகள் மீண்டும் கையில் எடுக்கப்பட்டு உள்ளது, என்னை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவை நடக்கிறது. பல்வேறு மாநிலங்களில் என்னை கைது செய்து என்னை அமைதியாக்க வேண்டும் என முயற்சி மேற்கொள்ளப்படுகிறது, என்றார்.

மேலும், சரியான நேரத்தில் என்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியவர்கள் யார் என்பதையும் தெரிவிப்பேன் என கூறிஉள்ளார் பிரவீன் தொகாடியா.

பிரவீன் தொகாடியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா பதில் அளிக்கவேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது.

சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில், மத்தியில் பா.ஜனதா தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து அத்வானி உள்பட ஏராளமானவர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது.

பிரவீன் தொகாடியா போன்ற இந்துத்வா ஆதரவு தலைவர்களுக்கு உயிர் பயம் ஏற்படும்போது, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால், பிரதமர் மோடி மீது கூட கடுமையான குற்றச்சாட்டுகளை பிரவீன் தொகாடியா முன்வைத்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு 4 மூத்த நீதிபதிகள் நீதித்துறையில் மத்திய அரசின் குறுக்கீடு இருப்பதாக குற்றம்சாட்டியபோது, அவர்களை தேசவிரோதிகள் என்றும், காங்கிரசின் ஏஜெண்டுகள் என்றும் வர்ணித்தீர்கள். இப்போது, பிரவீன் தொகாடியாவுக்கு என்ன பட்டம் கொடுக்க போகிறீர்கள்?

இந்துத்வாவின் சின்னமாக விளங்கும் வீர சவார்க்கர், பால் தாக்கரே ஆகியோர் ஒருபோதும் ஆதரவற்ற நிலையை வெளிப்படுத்தியதும் இல்லை. கண்ணீர் சிந்தியதும் இல்லை. ஆனால், பிரவீன் தொகாடியா கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். போலீஸ்காரர்கள் என்ற போர்வையில், அவரை நெருங்க கொலையாளிகள் முய்ற்சிக்கிறார்களா? எங்களை பொறுத்தமட்டில் இந்துத்வா என்பது விளையாட்டோ அல்லது அரசியல் புரிவதற்கான களமோ அல்ல, தேசிய கடமை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்