தேசிய செய்திகள்

சக்தி வாய்ந்த படையை கொண்டு சுயராஜ்ஜியம் நிறுவியவர் சிவாஜி; முதல்-மந்திரி பட்னாவிஸ் புகழாரம்

சிவாஜி மகராஜா பல்வேறு சமூக மக்களை ஒன்றிணைத்து, சக்தி வாய்ந்த படையை திரட்டி சுயராஜ்ஜியம் நிறுவியவர் என பட்னாவிஸ் கூறினார்.

புனே

இந்திய வரலாற்றில் மிக சிறந்த வீரராக, மராட்டிய சாம்ராஜ்யம் உருவாக அடிப்படையாக இருந்தவர் சத்ரபதி சிவாஜி. அவருடைய பிறந்த ஆண்டு கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் புனே நகரில் உள்ள சிவநேரி கோட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, இந்த பூமியில் பல மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் முகலாய மன்னர்களின் பாதம் பணிந்தபோது, ஜீஜாமாதா சத்ரபதி சிவாஜி மகராஜாவை வளர்த்து எடுத்தார்.

அப்போது அவர் சிவாஜியிடம், முகலாயர்களிடம் இருந்து இந்த பூமியை விடுவித்து சுயராஜ்ஜியம் உருவாக செய்ய வேண்டும் என்று கற்று கொடுத்தார்.

சிவாஜி மகராஜா பல்வேறு சமூக மக்களை ஒன்றிணைத்து, சக்தி வாய்ந்த படையை திரட்டி சுயராஜ்ஜியம் நிறுவியவர் என உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்போது அவர், இது என்னுடைய அரசாங்கம் இல்லை. இது மக்களின் அரசாங்கம் என்றார்.

இந்த போரானது எனக்கான தனிப்பட்ட போர் அல்ல. ஆனால், கடவுளுக்காக, நாட்டுக்காக மற்றும் தர்மத்திற்காக நடத்தப்படும் போர் என அவர் கூறினார்.

சமத்துவம், அனைவருக்கும் உரிமையுள்ள பகுதியை அவர் உருவாக்கினார். அதில, அநீதிக்கும், ஒடுக்குமுறைக்கும் இடம் இல்லை. பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர் என பட்னாவிஸ் கூறினார்.