புது டெல்லி,
மத்திய அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது இடஒதுக்கீட்டு முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. பதவி உயர்வு பெறும் போது, பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டு முறை தற்போது அமலில் உள்ளது. இந்த இடஒதுக்கீட்டு முறை தொடர்பாக மத்திய அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், சஞ்ஜீவ் கண்ணா மற்றும் பி ஆர் கவாய் ஆகியோரை கொண்ட அமர்வு, மத்திய அரசின் சார்பில் தொடரப்பட்ட இந்த மனுவை விசாரித்தனர்.
பதவி உயர்வில் செல்லும் மத்திய அரசு பணியாளர்களில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்குமாயின் அதற்கான தரவுகள் எங்கே ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வு பெறும்போது பின்பற்றப்படும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு முறையில், அந்த பிரிவின் கீழ் வரும் பணியாளர்கள் போதுமான எண்ணிக்கையில் நிரப்பப்பட்ட பின்னும், தொடர்ந்து இடஒதுக்கீடு முறையை பின்பற்றுவது தர்மம் அல்ல என்றும் தெரிவித்தனர்.
1997ம் ஆண்டுக்கு பின் மத்திய அரசுத் துறை பணிகளில் எத்தனை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவு பணியாளர்கள் உள்ளனர் என்பது குறித்த தரவுகள் ஏதும் உள்ளனவா? இதற்காக மத்திய அரசின் சார்பில் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? போன்ற கேள்விகளையும் அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபாலிடம் நீதிபதிகள் எழுப்பினர்.
அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால் கூறுகையில், 1965ம் ஆண்டு 3.34% சதவீதம் இருந்த எஸ்.சி பிரிவு பணியாளர்களின் எண்ணிக்கை தற்போது 17.5% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, 0.62% இருந்த எஸ்.டி பிரிவு பணியாளர்களின் எண்ணிக்கை 6.82% ஆக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார். குரூப்-சி மற்றும் குரூப்-டி பிரிவு பணிகளில் அதிக அளவில் எஸ்.சி எஸ்.டி பிரிவின் கீழ் வரும் பணியாளர்கள் உள்ளனர். அதே சமயம், குரூப்-ஏ மற்றும் குரூப்-பி பிரிவில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர் என்று தெரிவித்தார்.
முன்னதாக 2017ம் ஆண்டு, பொதுப்பிரிவின் கீழ் வரும் பணியாளர்கள் பதவிஉயர்வின் போது பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறை சம்பந்தமாக தொடர்ந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.