பெங்களூரு:
கர்நாடகத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் பல்வேறு தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிப்பதில் மத்திய அரசு தனது நிலைப்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து மறுபரிசீலனை நடத்த வேண்டும். இதுபற்றி மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். இதுவரை அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிப்பது, அங்கு நிவாரண பணிகளை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தாமதம் ஆவது என அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்திய அரசின் நிலைபாடுகளே காரணம்.
வறட்சி பாதித்த பகுதிகளை அறிவிக்கும் நடைமுறைகளில் மாற்றம் செய்வது மாநில அரசால் மட்டும் சாத்தியம் ஆகாது. மத்திய, மாநில அரசுகள் இணைந்தே செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய மாநில பா.ஜனதா தலைவர்கள், கர்நாடக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். மாநில அரசு மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறுவது சரியில்லை. வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிக்கவும், அங்கு நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.