கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதை தொடர்ந்து முதல் மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவகுமார், ஜி.பரமேஷ்வர் ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவியது. நீண்ட இழுபறிக்கு பின்னர் சித்தராமையாவுக்கு முதல் மந்திரி பதவியும், டி.கே.சிவகுமாருக்கு துணை முதல் மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அப்போது இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல் மந்திரி பதவி வழங்க காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சித்தராமையா முதல்மந்திரியாக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில், டி.கே.சிவகுமாருக்கு அந்த பதவியை வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முதல்வர் மாற்ற விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பிறகு பதவியில் இருந்து விலக சித்தராமையா ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து, முதல்-மந்திரி சித்தராமையா இன்று காலை 9 மணிக்கு அனைத்து மந்திரிகளுக்கும் சிற்றுண்டி கூட்டத்தை தனது வீட்டில் ஏற்பாடு செய்து இருந்தார். இந்த விருந்துக்கு பிறகு தனது ராஜினாமா முடிவை சித்தராமையா அறிவித்தார். கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக டிகே சிவக்குமார் நாளை பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.