சண்டிகார்,
பஞ்சாப்பில் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அரசில் நடந்த சில அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் நியமனங்கள் பிடிக்காததால், தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து உதறினார். இது தொடர்பாக கட்சித்தலைமைக்கு அவர் ராஜினாமா கடிதமும் அனுப்பினார்.
இதனால் மாநில காங்கிரசில் பெரும் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, சித்துவுடன் கட்சித்தலைமை தொடர் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக அவர் தனது ராஜினாமா முடிவை கைவிட்டார். இந்த நிலையில் தனது ராஜினாமாவை நவ்ஜோத் சிங் சித்து நேற்று திரும்பப்பெற்று உள்ளார்.
இந்த தகவலை பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் வெளியிட்டார். அதே நேரம் மாநிலத்துக்கு புதிய அட்வகேட் ஜெனரலை நியமிக்கும் நாளில் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்று தனது பணிகளை கவனிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.