லக்னோ
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியான முக்தர் அப்பாஸ் நக்வியின் சகோதரி பர்காத் நக்வி. இவர் விவாகரத்து செய்து கொண்ட பெண்களுக்கான அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். லக்னோவில் உள்ள குடும்ப நல ஆலோசனை மையத்தில் உறுப்பினராக இருக்கும் இவர், குடும்ப பிரச்சினைகளுக்கு ஆலோசனைகளும் வழங்கி வருகிறார்.
இவர் நேற்று அந்த மையத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்று விட்டு ரிக்ஷாவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது கார் ஒன்று அந்த ரிக்ஷாவை பின்தொடர்ந்து சென்றது.
பின்னர் சவுக்கி சவுரகா பகுதியில் வைத்து அந்த ரிக்ஷாவை வழிமறித்து நிறுத்திய காரில் இருந்தவர்கள், பர்காத்தை ஆபாச வார்த்தைகளால் திட்டினர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்து விட்டு தப்பி ஓடினர்.
இது குறித்து பர்காத் நக்வி அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், காரில் தப்பி ஓடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.