புதுடெல்லி,
மக்களவையில் 2022- ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா நேற்று நிறைவேறியது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய நிதித்துறை மந்திரி
நிர்மலா சீதாராமன், நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம் என்றார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த சீதாராமன், மக்கள் மீது குறைந்த சுமையை சுமத்துவதாக அரசாங்கம் நம்புகிறது என்று கூறினார்.
மேலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், 1951இல், பண்டிட் ஜவஹர்லால் நேரு, கொரியப் போர் இந்தியாவின் பணவீக்கத்தை பாதிக்கும் என்று கூறலாம், ஆனால், இன்றைய உலகமயமாக்கப்பட்ட இணைக்கப்பட்ட உலகில், உக்ரைன் போர் இந்தியாவை பாதிக்கிறது என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்.
கூடுதல் சுமையை நாங்கள் கொண்டு வரவில்லை. எண்ணெய் சந்தை நிறுவனங்கள் 15 நாள் சராசரியை அதிக விலையில் கொள்முதல் செய்கின்றனவெனில், அதை நாங்கள் தான் தாங்கிக்கொள்ள வேண்டும்.
அனைத்து நாடுகளிலும் உக்ரைன் போர் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியை சீர்குலைப்பதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நரேந்திர மோடி பிரதமர் என்ற முறையில், வரிகளைக் குறைத்து, சாமானிய மக்கள் மீது சுமையைக் குறைக்க வேண்டும் என்று ஒரு அரசாங்கமாக, நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதை தொடர்ந்து வெற்றிகரமாக செய்து வருகிறோம்.
ஜிஎஸ்டி இழப்பீடு விவகாரத்தில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவின்படியே, ஒவ்வொரு மாநிலமும் இழப்பீடு பெறுகிறது. சில மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை மிக அதிகமாக உள்ளன என்று சிலர் கேல்வி ழுப்புகின்றனர்.ஆனால், அவற்றை நான் முடிவு செய்யவில்லை.
இப்போது ரூ.53,000 கோடி தொகை நிலுவையில் உள்ளன, அதுவும் ஜிஎஸ்டி கவுன்சிலால் தீர்மானிக்கப்பட்ட தொகையாகும். ஜிஎஸ்டி கவுன்சில், ஏற்கனவே ஜிஎஸ்டி இழப்பீட்டு வரியை மார்ச் 2026 வரை நீட்டித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.