தேசிய செய்திகள்

திருமணத்திற்கு சென்று திரும்பிய போது விபத்தில் சிக்கி 6 பேர் பலி - உத்தர பிரதேசத்தில் சோகம்

பஸ்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாப்பிள்ளையின் தந்தை உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் பஸ் ஒன்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் சொந்த ஊருக்கு இன்று காலை சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் மணமகனின் தந்தையும் பயணம் செய்திருந்தார். அப்போது தௌலானா-குலாவதி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், பஸ்சின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்து, வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த நிலையில், சம்பவ இடத்திலேயே மாப்பிள்ளையின் தந்தை மற்றும் பஸ் டிரைவர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும், பலர் கடுமையாக காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.