புதுடெல்லி,
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லியில் உள்ள அவரது வீட்டு குளியலறையில் கடந்த 9-ந்தேதி தவறி விழுந்தார். இதனால் அவரது மூளையில் உறைந்த ரத்தக்கட்டி மறுநாள் டெல்லி ராணுவ ஆர்.ஆர். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மோசமடைந்தது. மேலும் அவர் கோமா நிலைக்கு சென்றார். இதனால் சுமார் 10 நாட்களாக தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. முன்னதாக அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் தற்போது லேசான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக டாக்டர்கள் நேற்று தெரிவித்தனர். அதாவது பிரணாப்பின் சுவாசப்பாதையின் செயல்பாடுகளில் லேசான முன்னேற்றம் காணப்படுவதாகவும், எனினும் அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில்தான் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
முன்னதாக அவருக்கு நேற்று முன்தினம் நுரையீரல் தொற்று ஏற்பட்டது. எனினும் அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் மற்றும் சிகிச்சை நிலவரங்கள் அனைத்தும் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு ஒன்று உன்னிப்பாக கவனித்து வருகிறது.