தேசிய செய்திகள்

மேற்கு வங்க தேர்தலில் மந்தகதியில் வாக்கு பதிவு; ஊடகம், பா.ஜ.க. வேட்பாளர் கார்கள் மீது தாக்குதல்

மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலில் ஊடகங்கள் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர் சென்ற கார்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில சட்டசபைக்கு 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்று 4வது கட்ட தேர்தல் நடக்கிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ்-இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம், 373 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் வெற்றி பெறும் வேட்பாளர்களை, ஒரு கோடியே, 15 லட்சத்து, 81 ஆயிரத்து, 22 வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.

ஹவுரா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி, அலிபுர்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இதில், கூச் பெஹார் பரபரப்பான மாவட்டமாக கருதப்படுகிறது. மொத்தமுள்ள, 15 ஆயிரத்து 940 ஓட்டுச்சாவடிகளுக்கு, 789 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்றைய தேர்தலில், பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பபுல் சுப்ரியோ, டோலிகஞ்ச் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அருப் பிஸ்வாசை எதிர்த்து களம் காண்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் பொது செயலரும், மாநில மந்திரியுமான பார்த்தா சாட்டர்ஜி, பா.ஜ.க.வை சேர்ந்த நடிகை ஷ்ரபந்தி சாட்டர்ஜியை எதிர்த்து போட்டியிடுகிறார். திரிணாமுல் காங்கிரசில் இருந்து சமீபத்தில் விலகி பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் மந்திரி ரஜிப் பானர்ஜி, ஹவுராவின் டோம்ஜுர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதனையடுத்து ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. ஓட்டுப்பதிவை முன்னிட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் என வாக்காளர்கள் அனைவரும் காலையிலேயே தங்களுடைய அடையாள அட்டைகளுடன் ஆர்வமுடன் வாக்களிக்க வந்து வரிசையில் நின்றனர்.

அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்பின்னர் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலில் காலை 9:50 மணி நிலவரப்படி 15.85% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தோராய அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. சில வாக்கு சாவடிகளில் இருந்து தரவுகள் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

சுன்சுரா தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராக லாக்கட் சாட்டர்ஜி போட்டியிடுகிறார். மக்களவை எம்.பி.யான இவரை வேட்பாளராக பா.ஜ.க. களம் இறக்கியுள்ளது. அவர், ஓட்டுப்பதிவுக்கு முன் கோவிலுக்கு சென்று இன்று காலை சாமி தரிசனம் செய்தார். இதன்பின்னர் ஹூக்ளி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய சாட்டர்ஜி, மோடிஜி சிறந்த தலைவர் என பிரசாந்த் கிஷோருக்கு கூட தெரியும்.

மோடிஜியின் தலைமையின் கீழ் வளமான வங்காளதேசம் உருவாக்கப்படும். ஆனால், மக்களை முட்டாளாக்குவதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கிஷோர் கூட்டு சேர்ந்துள்ளார் என கூறினார். இதன்பின்னர் அவர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். அவர் செல்லும் வழியில் உள்ளூர்வாசிகள் சிலர் அவரது காரை வழிமறித்தனர்.

இதுபற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அவர்கள் கூட்டத்தினரை கட்டுப்படுத்தினர். எனினும், அவர்களில் சிலர் ஆவேசமுடன் லாக்கட் சாட்டர்ஜியை நோக்கி அடிக்க ஓடினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், கூட்டத்தில் இருந்த யாரோ சிலர் அவரது கார் கண்ணாடியை அடித்து, நொறுக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலில் காலை 11.05 மணி நிலவரப்படி 16.65% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. காலை 9:50 மணி நிலவரப்படி 15.85% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், தொடர்ந்து மந்தகதியில் வாக்குகள் பதிவாகி வருகின்றன.

இந்த சூழலில் மேற்கு வங்காள தேர்தலில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகக்காரர்களின் கார்கள் மீதும் வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களது கார்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஊடகங்கள் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர் லாக்கட் சாட்டர்ஜி சென்ற கார்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்