சுவப்னா சுரேஷ் கைது
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் துபாய் தூதரக பார்சல் மூலம் வந்த 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.15 கோடியாகும். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் பணியாற்றிய சுவப்னா சுரேஷ், சரித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தூதரக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சொந்த நாட்டுக்கு தப்பி சென்றனர்.
தங்கம் கடத்தலுக்கு சுவப்னா சுரேசுக்கு உடந்தையாக இருந்ததாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் அவர் 27-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சுவப்னா சுரேஷ் திருவனந்தபுரம் அட்ட குளங்கரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெளிவர முடியாத நில
இதுதொடர்பாக அமலாக்க பிரிவினர், சுங்க இலாகா, தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் 6 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் சுங்க இலாகா மற்றும் அமலாக்க துறையினர் தொடர்ந்த வழக்கில் சுவப்னா சுரேஷ், சரித் கூட்டாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 167 கிலோ தங்கத்தை கடத்தி அதன் மூலம் கிடைத்த பணத்தை தேச துரோக செயல்களுக்கு பயன்படுத்தி வந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தொடர்ந்த உபா வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் சுவப்னா சுரேஷ் சிறையில் இருந்து வெளி வர முடியாத நிலை ஏற்பட்டது.
ஜாமீனில் விடுவிப்பு
இந்த நிலையில் சுவப்னா சுரேஷ் உள்பட 8 பேர் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் முறையிட்டனர். மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், சி.ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வு சுவப்னா சுரேஷ், சரித், முகம்மது ஷாபி, ஜலால், ராபின்ஸ், ரமீஸ், ஷராபுதீன், முகம்மது அலி ஆகிய 8 பேருக்கும் கடும் நிபந்தனைகளுடன் கடந்த 2-ந் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
ஜாமீன் நிபந்தனை கடுமையாக இருந்ததால் அதற்கான சட்ட பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஜாமீன் கிடைத்தும் சுவப்னா சுரேஷ் சிறையில் இருந்து உடனடியாக வெளிவர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஜாமீன் கிடைத்து 4 நாட்களுக்கு பிறகு அவர் நேற்று காலை 11 மணிக்கு விடுவிக்கப்பட்டார். திருவனந்தபுரம் அட்டகுளங்கரை மகளிர் சிறையில் இருந்து வெளியே வந்த சுவப்னா சுரேஷை அவரது தாயார் பிரபா நேரில் வந்து அழைத்து சென்றார்.
16 மாதத்திற்கு பிறகு...
16 மாதம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சுவப்னா சுரேஷிடம், வழக்கு விசாரணை குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. அதே சமயத்தில், இப்போது விளக்கம் அளிக்க ஒன்றும் இல்லை என கூறி விட்டு காரில் ஏறி சென்று விட்டார்.