தேசிய செய்திகள்

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவின் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே.

டெல்லி,

நாட்டின் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அன்னா ஹசாரே

இந்தியாவின் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. இவர் கடந்த 2011ம் ஆண்டு டெல்லியில் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உலக அளவில் கவனம் பெற்றார். இந்த உண்ணாவிரத போராட்டம் ஆம் ஆத்மி கட்சி உருவாக வழிவகுத்தது. பின்னர், ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை பிடித்தது. தேசிய கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்து தற்போது பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.

அதேவேளை, அன்னா ஹசாரே பல்வேறு பிரச்சினைகள், மாணவர்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

உடல் நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், 89 வயதான அன்னா ஹசாரே தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகில்யாநகர் மாவட்டம் ராலிகன் சிந்து கிராமத்தில் வசித்து வந்தார். அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அன்னா ஹசாரேவுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT