தேசிய செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் கொரோனாவுக்கு பலி; ஜனாதிபதி, பிரதமர் உள்பட தலைவர்கள் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவுக்கு பலியானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மரணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி (வயது 35). திருமணம் ஆனவர்.இவருக்கு 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. டெல்லி அருக குர்கானில் உள்ள மெடண்டா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை நன்கு தேறிவந்த நிலையில், நேற்று காலை 5.30 மணியளவில் திடீரென இறந்து விட்டார்.இந்த சோக செய்திய சீதாராம் யச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் மூத்த மகன் ஆஷிஷ், கொரோனாவுக்கு பலியாகி விட்டார் என்பதை மிகுந்த துயரத்துடன் அறிவிக்கிறேன்.எங்களுக்கு நம்பிக்கை அளித்து வந்தவர்கள், என் மகனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் நர்சுகள், முன்கள சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கும், எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மறைந்த ஆஷிஷ், ஒரு பத்திரிகையாளர் ஆவார். அவர் சென்னையில் உள்ள ஏஷியன் இதழியல் கல்லூரியில் இதழியல் படித்தார்.டெல்லியில் பிரபலமான பத்திரிகைகளில் பணியாற்றினார். பிறகு மராட்டிய மாநிலம் புனேவுக்கு இடம் பெயர்ந்தார். அவரது மனைவி பெயர் சுவாதி.

சீதாராம் யெச்சூரி மகன் மறைந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தி வருமாறு:-

மிகச்சிறிய வயதில் ஆஷிஷ் யெச்சூரி மறைந்த செய்தியை கேள்விப்பட்டு வார்த்தையில் விவரிக்க முடியாத துயர் அடைந்தேன். இந்த சோகமான தருணத்தில் சீதாராம் யெச்சூரிக்கும், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பை தாங்கக்கூடிய வலிமையை அவர்கள் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மகனை இழந்து வாடும் சீதாராம் யெச்சூரிக்கும், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சீதாராம் யெச்சூரியின் மகன் மறைவையொட்டி யெச்சூரிக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர இழப்பை தாங்கக்கூடிய மனவலிமையை அவர்கள் பெறுவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரியின் இழப்பு ஆழ்ந்த கவலையையும், மன வருத்தத்தையும் தருகிறது. இந்தக் கடினமான நேரத்தில், சீதாராம் யெச்சூரி மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேலிட குழு, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.