திருவனந்தபுரம்,
பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவருக்கும், ஏற்கனவே இந்த வழக்கில் கைதான பல்சர் சுனிலுக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து கொச்சி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைதானது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திலீப்பை 2 நாள் காவலில் எடுத்துள்ள போலீசார், ஆதாரங்களை திரட்ட திரிசூர் உள்ளிட்ட இடங்களுக்கு அவரை இன்று அழைத்துச்சென்றனர்.
இந்த நிலையில், தன் மீதான பாலியல் தொல்லை வழக்கில் திலீப் கைது செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக பாவனா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாவனா கூறியிருப்பதாவது:- கடந்த சில தினங்களாக இந்த வழக்கில் வெளிப்பட்டு வரும் விவரங்களை பார்த்து உங்களைப்போலவே நானும் அதிர்ச்சி அடைந்தேன்.
அந்த நடிகருடன் ( திலீப் பெயரை குறிப்பிடவில்லை) கடந்த காலங்களில் சில படங்களில் நான் இணைந்து நடித்து இருக்கிறேன். ஆனால், தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக எங்களுக்கு இடையேயான நட்பு பாதிக்கப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்கான இந்த வழக்கில் நான் யாரையும் குற்றவாளியாக்க விரும்பவில்லை. அவருக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும்இருப்பதாக நான் ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டேன். அவரது சகோதரர் அனூப் கூறியது போல அவர் குற்றமற்றவர், இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டு இருக்கிறார் என்றால் உண்மையும் விரைவாக வெளி வரவேண்டும்.
அப்படி இல்லையென்றால் அவரது தவறுகள் விரைவில் வெளியே வர வேண்டும் என விரும்புகிறேன். சட்டத்தின் முன் அனைவரும் சமம். அப்பாவியும் தண்டிக்கப்படக் கூடாது, குற்றவாளியும் தப்பித்துவிடக் கூடாது. அந்த குறிப்பிட்ட நடிகருடன் ரியல் எஸ்டேட் மற்றும் பிற முதலீடுகளில் நான் கூட்டு வைத்திருப்பதாக சில தகவல்கள் வருகின்றன.
அவை அனைத்தும் பொய்யாகும். அப்படி எதுவும் எங்களிடையே இல்லை. அத்தகைய உண்மையற்ற செய்திகள் சீக்கிரம் மறைந்து விடும் என நினைத்தேன். ஆனால் அவை மீண்டும் மீண்டும் ஊடகங்களில் வருகின்றன. அதனால் தெளிவு படுத்த விரும்புகிறேன். வேண்டுமென்றால், தேவைப்படும் எல்லா ஆவணங்களையும் விசாரணை அதிகாரிகளிடம் தர தயாராகவுள்ளேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.