தேசிய செய்திகள்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.332 லட்சம் கோடியை எட்டியதாக பொய்ச்செய்தி பரப்புவதா? காங்கிரஸ் கண்டனம்

மத்திய மந்திரிகள், மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி, பிரதமருக்கு மிகவும் பிடித்த தொழில் அதிபர் ஆகியோர் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலரை தாண்டியதாக பதிவு வெளியிட்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 டிரில்லியன் டாலராக (ரூ.415 லட்சம் கோடி) உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கிடையே, மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலரை (ரூ.332 லட்சம் கோடி) தாண்டி விட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியானது. அதை மத்திய நிதி அமைச்சகமோ, தேசிய புள்ளியியல் அலுவலகமோ உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், மத்திய மந்திரிகள் கஜேந்திரசிங் ஷெகாவத், கிஷன் ரெட்டி, மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர மாநில பா.ஜனதா தலைவர் புரந்தரேஸ்வரி, பிரபல தொழில் அதிபர் அதானி ஆகியோர் அதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், அது பொய்ச்செய்தி என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

19-ந் தேதி பிற்பகலில், கிரிக்கெட் போட்டியை காண்பதில் நாடு ஆர்வமாக இருந்தபோது, மோடி அரசுக்கு தம்பட்டம் அடிப்பவர்களான ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த மூத்த மத்திய மந்திரிகள், மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி, பிரதமருக்கு மிகவும் பிடித்த தொழில் அதிபர் ஆகியோர் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலரை தாண்டியதாக பதிவு வெளியிட்டனர்.

அது, கூடுதல் பரவசத்தை உருவாக்க பரப்பப்பட்ட முற்றிலும் பொய்யான செய்தி. முகஸ்துதி செய்யவும், தலைப்புச்செய்தியில் இடம் பிடிக்கவும் நடத்தப்பட்ட பரிதாபகரமான முயற்சி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்