புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில், தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்) பேசியதாவது:-
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.-48) மிகவும் அதிகமான போக்குவரத்து அடர்வு கொண்ட 80 கி.மீ. நீளமான சென்னை-காஞ்சீபுரம் நெடுஞ்சாலைப் பகுதிகளில், வாகன ஓட்டிகள், சாலையைக் கடக்கும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள், பாதசாரிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சுரங்கப் பாதைகள், மேம்பால வசதிகளை அமைத்திட வலியுறுத்தியும், இது தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள திட்ட ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
மேலும், தண்டலம் மற்றும் சந்தைவேலூர் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையை ஆபத்துகளின்றி கடந்து செல்ல சுரங்கப் பாதைகளும், ராஜீவ்காந்தி சிலை அருகில் உள்ள சாலைச்சந்திப்பில் கிரேடு செபரேட்டர் எனப்படும் தளம் பிரிக்கப்பட்ட மேம்பால வசதியை உருவாக்கக் கோரியும், டி.ஆர்.பாலு, எம்.பி. வலியுறுத்தினார்.
இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி, மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் அமைந்துள்ள தண்டலம் மற்றும் சந்தைவேலூரில் சிறு ரக வாகனங்கள் நெடுஞ்சாலையை எளிதாகக்கடக்க ஏதுவாக வாகன சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையின் சென்னை-மதுரவாயல் பகுதி நான்கு வழிச்சாலையாக உள்ளது. எனவே, மதுரவாயல்-வாலாஜாபேட்டை சாலையை 6 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிக்கான ஒப்பந்த உரிமம் ஜூன் 2012-ம் ஆண்டில் வழங்கப்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரர் இப்பணியினை முறையாக மேற்கொள்ளாத காரணத்தால், அந்த ஒப்பந்தம் 2016-ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்தத் திட்டப் பணிகள் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை சாலையை 6 வழிச்சாலையாக அமைக்கும் பணி இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. பணிகள் வரும் 2021-ம் ஆண்டு மே மாதம் முடிவடையும்.
மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் சாலைப் பகுதியைப் பொறுத்தவரையில், இது உயர்மட்ட 6 வழிப்பாலமாக அமைக்கப்பட உள்ளது. இந்த உயர்மட்ட விரைவுச்சாலை சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையின் ஒரு பகுதியாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டது.
தண்டலம் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் தொடங்கிவிட்டது. ஸ்ரீபெரும்புதூர்-மதுரவாயல் 6 வழிச்சாலை திட்டப்பணிகள் தொடங்கிவிட்டன. இதன் அங்கமான சந்தைவேலூர் சுரங்கப் பாதை வசதியும் அமைக்கப்படும். அதைப்போல, ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை 6 வழி நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி சிலை அருகே உள்ள சாலைச் சந்திப்பிலும் பறக்கும் பாலம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.