லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டம் லகிம்பூரில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறையில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க செல்லும் அரசியல் தலைவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வந்தது. அந்த வகையில், லகிம்பூர் சென்ற பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, வன்முறை நடைபெற்ற லகிம்பூருக்கு செல்ல இருப்பதாகவும், விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திப்பதை யாரும் தடுக்க முடியாது எனவும் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
தொடர்ந்து லகிம்பூருக்கு ராகுல் காந்தி புறப்பட்டுள்ளார். இந்த நிலையில், லகிம்பூரில் விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 5 பேருக்கு உத்தர பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது.