புதுடெல்லி,
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் ஆஜராகி, தங்கள் தரப்பு மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார்.
அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, இந்த மனு வருகிற 8-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விவகாரத்தில் ஆலையை திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் டிசம்பர் 15-ந் தேதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளது. ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பிலும் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.