தேசிய செய்திகள்

ஆலையை திறக்க ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு: ஸ்டெர்லைட் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க மறுத்த ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு மே 28-ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அந்த ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அந்த குழு ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில், ஆலையை மீண்டும் திறக்க தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஆலையை மீண்டும் திறக்க இடைக்கால தடை விதித்தும், இந்த வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறி, சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

வேதாந்தா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சென்னையைச் சேர்ந்த சி.எம்.விஜயலட்சுமி என்பவர் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக தன்னையும் வழக்கில் சேர்த்துக்கொள்ள கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராகவும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை விசாரிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று தமிழக அரசு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு