டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்மந்திரி ஹரிஷ் ராவத் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு, அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. அப்போது, பா.ஜனதாவுக்கு தாவிய காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை மீண்டும் பெறுவதற்காக, ஹரிஷ் ராவத் பண பேரம் பேசுவது போன்ற வீடியோ வெளியானது.
இந்த குதிரை பேரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரகாண்ட் ஐகோர்ட்டு சமீபத்தில் அனுமதி அளித்தது. அதையடுத்து, சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. வழக்குப்பதிவு செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரகாண்ட் முன்னாள் முதல் மந்திரி ஹரிஷ் ராவத், கடவுள் மீதும் நாட்டின் நீதித்துறை மீதும் தனக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.