புதுடெல்லி,
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, நவம்பர் 8ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்ட மோசமான விளைவுகளை அனுசரிக்கும் வகையில் தேசிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ள எதிர்க்கட்சிகள் அன்றைய தினம் கருப்பு தினம் அனுசரிக்கிறது. ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை பெரும் தோல்வி என காங்கிரஸ் விமர்சனம் செய்து வரும் நிலையில் பாரதீய ஜனதா சார்பில் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் காஷ்மீரில் கல்வீச்சு சம்பவம் குறைந்து உள்ளது என அருண் ஜெட்லி கூறிஉள்ளார்.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு நடவடிக்கையினால் ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு சம்பவம் குறைந்து உள்ளது. நக்சலைட் தீவிரவாதிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பணம் இல்லாத காரணமாக துஷ்டர்களின் நடவடிக்கைகள் முடங்கி உள்ளது. என ஜெட்லி கூறிஉள்ளார். தெற்கு ஆசியன் பயங்கரவாத வலைதள தகவல் தரவு தகவலின்படி பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2016-ம் ஆண்டு 267 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவே 2017 அக்டோபர் 29 வரையில் மட்டும் 298 ஆக அதிகரித்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2015-ம் ஆண்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 174 ஆகும்.
வருமான வரித்துறையின் பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக ஜெட்லி தகவல் தெரிவிக்கையில் 2015 - 16-ம் ஆண்டுடன் ஒப்பீடுகையில் 2016-17-ம் ஆண்டில் வருமான வரித்துறை கணக்கில் வராத ரூ. 15,497 கோடியை பறிமுதல் செய்து உள்ளது, இது 2015-16-ம் ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்டதைவிட 38 சதவிதம் அதிகமாகும். 2016-17ம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் தெரிவிக்கப்படாத வருமானம் ரூ. 13,716 கோடியாகும், இது 41 சதவிதம் அதிகமாகும் என கூறிஉள்ளார்.