ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் உள்ள பதிகாம் என்னும் கிராமத்தில் நேற்று 5 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீர் பல்கலைக்கழக சமூகவியல் துறை உதவி பேராசிரியர் முகமது ரபியும் கொல்லப்பட்டார். அப்போது பாதுகாப்பு படையினருக்கு எதிராக கல்வீசி வன்முறையில் ஈடுபட்ட பொதுமக்களில் ஐவர் துப்பாக்கி சூட்டில் பலியாயினர். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி பர்கான் வானி 2018 ஜூலையில் கொல்லப்பட்டதை அடுத்து இளைஞர்கள் பயங்கரவாத பாதைக்கு செல்வது அதிகரித்து காணப்படுகிறது. இதனை அரசு தரப்பு தகவல்களும் உறுதி செய்து வருகிறது.
இளைஞர்கள் பயங்கரவாத மற்றும் வன்முறை பாதையை தவிர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கள் மற்றும் பாதுகாப்பு முகமைகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்படுகிறது. பயங்கரவாத பாதைக்கு சென்ற இளைஞர்களை திரும்பவர கோரியும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று என்கவுண்டரின் போது வன்முறை வெடித்த போது 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தி, வன்முறை பாதை இஸ்லாமிற்கு எதிரானது குழந்தைகள் அதில் செல்வதை தடுத்து நிறுத்துங்கள் என பெற்றோர்களுக்கு கோரிக்கையை விடுத்து உள்ளார்.
என்கவுண்டரின் போது பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனையை தெரிவித்த மெகபூபா முப்தி அமைதி மற்றும் இணக்கத்துடன் வாழவே கடவுள் இவ்வாழ்க்கையை கொடுத்து உள்ளார், 18 அல்லது 20 வயதில் உயிரிழப்பதற்கு கிடையாது. இஸ்லாமும் இதனை அனுமதிப்பது கிடையாது, என்றார். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் வன்முறை பாதையில் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கையை விடுத்து உள்ளார் மெகபூபா முப்தி.
பள்ளத்தாக்கு பகுதியில் தினமும் நடக்கும் வன்முறையில் அப்பாவி இளைஞர்கள் உயிரிழந்து வருகிறார்கள், அவர்களை காப்பாற்ற தேவையான வழியை கண்டுபிடிக்க வேண்டும் என மாநில மக்களுக்கும், தேச மக்களுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கையை விடுக்கிறேன். பொருளாதார ரீதியில் பின்தங்கிய இளைஞர்கள் கையிலே பெரும்பாலும் கற்கள், துப்பாக்கிகள் செல்கிறது. இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உயிரிழப்பை தடுக்கும் வகையில் வழியை காணவேண்டும், வன்முறையை முடிக்கு கொண்டுவர வேண்டும். வன்முறையை முடிக்கு கொண்டுவர மத்திய அரசு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்ட வேண்டும். காஷ்மீர் அரசியல் பிரச்சனையாகும், இதனை தீர்க்க அரசியல் தலையீடு தேவையானது என கூறிஉள்ளார் மெகபூபா முப்தி. அனைத்து தரப்புடன் பேச்சுவார்த்தை என்பதன் மூலமே பிரச்சனையை சரிசெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.