புதுடெல்லி,
ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த 25 எம்.பி.க்கள், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளனர். அவர்கள் இன்று காஷ்மீருக்கு செல்கிறார்கள். அங்குள்ள கள நிலவரத்தை நேரில் அறிவதுடன், அங்குள்ள மக்களுடன் உரையாடுகிறார்கள்.
இதுதொடர்பாக நேற்று பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்து பேசினர். அவர்களிடம் பயங்கரவாதத்தை ஆதரிப்போர் மீது உடனடி நடவடிக்கை தேவை என்று மோடி வலியுறுத்தினார்.
இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.க்களை அனுமதிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
இந்திய அரசியல் தலைவர்கள், காஷ்மீருக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அதேசமயத்தில், தேசியத்தை காக்க வந்தவர் என்று மார்தட்டிக் கொள்பவர் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் எம்.பி.க்களை மட்டும் காஷ்மீர் செல்ல அனுமதிப்பது ஏன்?
இது, இந்திய நாடாளுமன்றத்துக்கும், நமது ஜனநாயகத்துக்கும் அவமதிப்பு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்ஜில் கூறியதாவது:-
ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.க்களை காஷ்மீர் செல்ல அனுமதிக்கும்போது, இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர்களை ஏன் அனுமதிக்கக்கூடாது? எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கு செல்ல சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்ட வேண்டியுள்ளது.
ஆனால், ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.க்களை பிரதமர் அலுவலகம் வரவேற்கிறது. இது, சம வாய்ப்பு மறுக்கப்படுகிற செயலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.