தேசிய செய்திகள்

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

தெருநாய்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை மாநில அரசுகள் அறிக்கையாக தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு, மாநில அரசுகள் தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்வது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தெருநாய்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை மாநில அரசுகள் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனாலும், பல மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் இதுதொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வக்கீல்(அமீகஸ் கியூரி), ‘சுப்ரீம் கோர்ட்டு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதை பல மாநிலங்கள் முறையாக பின்பற்றவில்லை’ என தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள், மாநில அரசுகளின் அறிக்கையில் எந்த முழுமையான விவரமும் இல்லை. மாநில அரசுகள் தெளிவான அறிக்கையை தாக்கல் செய்வது இல்லை. கடமைக்காக அறிக்கையை தாக்கல் செய்கின்றனர். அசாம் தவிர வேறு எந்த மாநிலமும், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் எத்தனை தெருநாய் கடி சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறித்த தரவுகளை வழங்கவில்லை. தெளிவில்லாத அறிக்கைகளை அளிக்கும் மாநிலங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வாதாடிய அமீகஸ் கியூரி, ‘தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதை அதிகரிக்க வேண்டும். தெருநாய்களுக்கு காப்பகங்கள் அமைக்கப்பட வேண்டும். சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் நாய்கள் மற்றும் கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ என்றார்.

மேலும் அவர், இந்த விவகாரத்தில் பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகளை இன்று (வியாழக்கிழமை) தெரிவிப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து, விசாரணை இன்றும் நடைபெற உள்ளது

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...