தேசிய செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மங்களூரு:-

கலெக்டர் ஆலோசனை

கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந்தேதி நடக்க உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் குறித்து தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரவிக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் குல்தீப்குமார் ஜெயின், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் ரவிக்குமார் பேசியதாவது:-

கடும் நடவடிக்கை

வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், அரங்குகள், தியேட்டர்கள் போன்றவற்றில் அரசியல் கூட்டங்கள் நடத்த அதன் உரிமையாளர்கள் அனுமதிக்கக்கூடாது. தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் அனுமதி பெறாமல் எந்த நிகழ்ச்சியும் நடக்கக்கூடாது. முன் அனுமதி பெற்று தான் கூட்டங்கள் நடத்த வேண்டும். இந்த வட்டங்களை தேர்தல் அதிகாரிகள் வீடியோ பதிவு செய்வார்கள். விதிமுறைகளை மீறி அவதூறாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பேனர், கட்-அவுட் வைக்க அனுமதி கிடையாது. தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக இருக்காமல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காணிப்பு

இதேபோல், சட்டசபை தேர்தல் குறித்து உடுப்பி மாவட்ட கலெக்டா அலுவலகத்திலும் கலெக்டர் குர்மாராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டர் குர்மாராவ் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்க முன் அனுமதி பெற வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் வீணா, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மஞ்சுநாத், கன்னடம் மற்றும் கலாசார துறை துணை இயக்குனர் பூர்ணிமா ஆகியோர் கலந்துகொண்டனர்.