புனே,
மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
105 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவிடம், ஆட்சி அமைக்க விருப்பமா? என்று கவர்னர் பகத்சிங் கோஷியாரி கேட்க, அந்த கட்சி விருப்பம் இல்லை என்று கூறி பின்வாங்கி விட்டது.
இதனால் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை கவர்னர், ஆட்சி அமைக்க அழைத்தார். இதனால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய சிவசேனா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது.
சிவசேனா குழுவினர் ஆதரவு கடிதங்களை அளிக்க கவர்னரிடம் 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.
அடுத்து 3வது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி தன்னிடம் தெரிவிக்குமாறு அவர்களிடம் கவர்னர் கேட்டு கொண்டார். ஆனால் அன்றிரவுக்குள் எம்.எல்.ஏ.க்கள் பற்றிய விவரங்களை வழங்குவது கடினம் என்று தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் அஜித் பவார் கூறினார்.
சட்டசபை பதவி காலம் முடிந்த நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் மற்றும் ஜனாதிபதி ஒப்புதலுடன் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
எனினும், மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதுபற்றி சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. கூறும்பொழுது, மராட்டியத்தில் அரசமைக்கும் நடைமுறை இன்னும் 5 முதல் 6 நாட்களில் முழுமையடையும். டிசம்பருக்கு முன் வலிமையான அரசு அமைக்கப்படும். அதற்கான நடைமுறைகள் நடந்து கொண்டிருக்கின்றன என கூறினார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்திப்பு பற்றி கூறிய ராவத், பிரதமர் என்பவர் நாடு முழுவதற்கும் உரியவர்.
மராட்டியத்தில் விவசாயிகள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே எப்பொழுதும் விவசாயிகளை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கின்றனர். பவார் விவசாயம் பற்றிய விசயங்களை நன்கு அறிவார். மராட்டிய சூழ்நிலையும் அவருக்கு தெரியும்.
இதுபற்றி பிரதமரிடம் பேசும்படி பவாரிடம் நாங்கள் கூட கோரிக்கை வைத்துள்ளோம். கட்சி வேற்றுமையின்றி அனைத்து மராட்டிய எம்.பி.க்களும் பிரதமரை சந்திப்போம். விவசாயிகளின் சூழ்நிலை பற்றி எடுத்துரைப்போம்.
அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்பதனை உறுதி செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவோம். மராட்டியத்தில் நாளை மதியம் 12 மணியளவில் அரசு அமைப்பது பற்றிய தெளிவான விசயங்கள் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறினார்.