கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. கடந்த வருட இறுதியில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு மம்தா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதனிடையே, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் ஜகதீப் தங்கர் காரில் சென்றார். அவரை பல்கலைக்கழகத்திற்குள் வரவிடாமல் மாணவர்கள் வழிமறித்தனர். இதன்பின்னர் அவருக்கு எதிராக திரும்பி போ என கோஷம் எழுப்பினர்.
மேற்கு வங்காள கவர்னருக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்புவது இது முதல்முறையல்ல. கடந்த டிசம்பர் 23ந்தேதி அவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தனது காரில் சென்றார். ஆனால் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்ற அவரை உள்ளே வரவிடாமல் காரை வழிமறித்து, எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கருப்பு கொடிகளை காட்டினர். பா.ஜ.க. ஆதரவாளரான தங்காரே திரும்பி போ! என்ற போஸ்டர்களை காட்டியும் அவரது காரை முற்றுகையிட்டனர்.
இதனால் அவரால் காரில் இருந்து அரை மணிநேரத்திற்கு மேலாக வெளியே வரமுடியவில்லை. இந்நிலையில், கல்கத்தா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்ற கவர்னரின் காரை வழிமறித்து முற்றுகையிட்டது அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பினை ஏற்படுத்தியதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.