மும்பை,
மும்பையின் மதுங்கா மற்றும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு இடையேயான ரயில் பாதைகளில், இன்று காலை நூற்றுக்கணக்கான இளைஞர்கள், தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரயில்வே அப்ரெண்டிஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுக்கு பணி நியமனம் வழங்க கோரி காலை 7 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இளைஞர்களின் திடீர் போராட்டத்தால், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால், அலுவலகம் மற்றும் தங்கள் அன்றாட பணிகளுக்காக ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போராட்டக்கார்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே அதிகாரிகளும் காவல்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் கூறும் போது, கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த பணி நியமனமும் செய்யப்படவில்லை. 10 மாணவர்கள் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ரயில்வே மந்திரி பியூஸ் கோயல் இங்கு வந்து எங்களை சந்திக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட போவது இல்லை. மும்பை பிரிவு ரயில்வே மேலாளரிடம் நாங்கள் பலமுறை விடுத்த கோரிக்கைகள் தோல்வியில்தான் முடிந்துள்ளது என்று தெரிவித்தார்.