தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் 103 வயது சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி திடீர் மரணம்; அரசு மரியாதையுடன் உடல் தகனம்

103 வயது சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் திடீரென மரணம் அடைந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

எச்.எஸ்.துரைசாமி மறைவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எச்.எஸ்.துரைசாமி

பெங்களூரு ஜெயநகரில் வசித்து வந்தவர் எச்.எஸ்.துரைசாமி (வயது 103). சுதந்திர போராட்ட தியாகியான அவர், தனது கடைசி காலம் வரை ஊழல், முறைகேடுகள், நில முறைகேடுகளுக்கு எதிராக போராடி வந்தார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் உள்ள ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.கொரோனாவின் பிடியில் இருந்த மீண்டதை அடுத்து அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 103 வயது முதியவரான எச்.எஸ்.துரைசாமி கொரோனாவை வென்றதை அனைவரும் வியப்புடன் பார்த்தனர். இது கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் அளித்தது.

சுதந்திர போராட்டம்

சமீபத்தில் வீட்டுக்கு திரும்பிய சில நாட்களுக்கு பிறகு அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் ஜெயதேவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள ஹாரோஹள்ளி கிராமத்தில் 1918-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி பிறந்த அவர், சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தார். வெள்ளையர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு, சிறை சென்றார்.

தலைவர்கள் இரங்கல்

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பவரவாணி என்ற பத்திரிகையை நடத்தினார். சுதந்திரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் பெங்களூருவில் உள்ள சென்டிரல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். 100 வயதை தண்டிய பிறகும், ஓய்வு எடுக்காமல் அநீதிகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். 100 வயதை தாண்டியும் வாழ்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவே. அவர் பங்கேற்ற போராட்டங்கள் அரசின் கவனத்தை ஈர்த்தது. அவர் முன்வைத்த கருத்துகளை அரசு கவனத்தில் கொண்டு செயல்பட்டது. அதனால் பல்வேறு அமைப்புகள், தாங்கள் நடத்திய போராட்டங்களில் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்து கலந்துகொள்ள செய்தன. அவர் பங்கெடுத்தால் கோரிக்கைகள் தீரும் என்பது போராட்டம் நடத்துபவர்களின் எண்ணமாக இருந்தது. பிரதமர் மோடியையும், பா.ஜனதாவின் கொள்கைகளையும் எச்.எஸ்.துரைசாமி எதிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.எச்.எஸ்.துரைசாமி மறைவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்பட மந்திரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள்

இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல் தகனம்

கொரோனாவில் இருந்து மீண்டு வந்து பின்னர் எச்.எஸ்.துரைசாமி இறந்ததால் அவர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இறந்தாரா? என்பதை கண்டறிய அவரது உடலில் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அந்த அறிக்கையின் முடிவில் எச்.எஸ்.துரைசாமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது. இதனால் எச்.எஸ்.துரைசாமியின் உடலை சுகாதாரத்துறையினர் சாம்ராஜ்பேட்டையில் உள்ள மின்மயானத்திற்கு எடுத்து சென்று அரசு மரியாதையுடன் தகனம் செய்தனர்.