புதுடெல்லி,
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித்தலைவர் சிபு சோரன் எம்.பி.க்கும் (வயது 76), அவரது மனைவி ரூபி சோரனுக்கும் கொரோனா தொற்று கடந்த 21-ந் தேதி இரவு உறுதியானது. அவர்கள் முதலில் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டனர். ஆனால் நேற்று முன்தினம் வயதைக் கருத்தில் கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சிபு சோரன், ராஞ்சியில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் நேற்று அவர் டெல்லியை அடுத்துள்ள குருகிராம் மேதாந்தா ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது மனைவி கல்பனாவுக்கும் தொற்று இல்லை என தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் முதல்-மந்திரி இல்ல ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராஜேந்திரா மருத்துவ கல்லூரி நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் மனோஜ் தெரிவித்தார்.