புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் எம்.பி.யின் மனைவியான சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து டெல்லி போலீசாரை கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சிஸ்டானி, சந்தர் சேகர் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி போலீஸ் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், இந்த வழக்கை மிகுந்த விடா முயற்சியுடன் போலீசார் விசாரித்து வருவதாகவும், விரைவில் இறுதி முடிவு தெரியவரும் என்றும் கூறினார். மேலும் சுப்பிரமணிய சாமியின் மனுவை எதிர்மறையான ஒன்றாக போலீசார் கருதவில்லை என்றும் தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் விசாரணை முடிவடையாமல் இருப்பதற்கு மிகுந்த அதிருப்தி வெளியிட்டனர். வழக்கின் இன்றைய நிலவரம் குறித்து அறிய விரும்புவதாக கூறியதுடன், இந்த வழக்கு விசாரணையை கோர்ட்டு மேற்பார்வையிடுவது அழகல்ல என்றும் தெரிவித்தனர். பின்னர் அடுத்தமாதம் (செப்டம்பர்) 21-ந்தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.