புதுடெல்லி
முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ம் ஆண்டு தெற்குடெல்லியில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் ஒரு அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து அந்த ஓட்டல் அறையை டெல்லி போலீசார் பூட்டி சீல் வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் அவ்வப்போது அந்த அறையை திறந்து சோதனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஓட்டல் அறைக்கு சீல் வைத்து இருப்பதால், தங்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே அந்த ஓட்டல் அறையை உடனே திறக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி, டெல்லி கோர்ட்டில் ஓட்டல் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 4 வாரங்களுக்குள் ஓட்டல் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி அறையை திறக்க வேண்டும் என்று போலீசுக்கு கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அறை திறக்கப்படவில்லை. நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி தர்மேந்தர் சிங், உடனடியாக ஓட்டல் அறையை திறக்க வேண்டுமென டெல்லி போலீசுக்கு உத்தரவிட்டார்.