புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.என்.சுக்லா. 2017-18-ம் கல்வியாண்டில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு சில தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. ஆனால் அதற்கு எதிராக அலகாபாத் ஐகோர்ட்டில் சுக்லா தலைமையிலான அமர்வு அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதுதொடர்பாக கடந்த 2017-ல் விசாரிக்க அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி சுக்லா மீதான புகாருக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவரை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவுக்கு இது தீவிரமான பிரச்சினை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை கொடுத்தது.
அதன்பேரில் இந்திய தலைமை நீதிபதி, சுக்லாவை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது விருப்ப ஓய்வுபெற வேண்டும் என்று கூறினார். ஆனால் சுக்லா இதனை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், நீதிபதி சுக்லா மீதான புகார்கள் உண்மை என்றும், அவரை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசாரணை குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மிகவும் தீவிரமான பிரச்சினை. எனவே அவருக்கு எந்த ஐகோர்ட்டிலும் நீதித்துறை பணிகள் ஒதுக்கக்கூடாது. இந்த சூழ்நிலையில் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.