கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

போதையில் யூ-டியூப் பார்த்து அறுவை சிகிச்சை; போலி டாக்டரால் பெண்ணுக்கு நடந்த கொடூரம்

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.25 ஆயிரம் ஆகும் என கூறி, பின்னர் ரூ.20 ஆயிரத்திற்கு முடிவானது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் பாராபங்கி நகரில் வசித்து வந்தவர் முனிஷ்ரா ராவத். இவருடைய கணவர் பதே பகதூர். இந்நிலையில், ராவத்துக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் நகரில் உள்ள அங்கீகாரம் இல்லாத ஸ்ரீ தாமோதர் அவுஷதாலயாவுக்கு, மனைவியை பகதூர் அழைத்து சென்றிருக்கிறார்.

கிளினிக்கின் உரிமையாளர்களாக ஞான பிரகாஷ் மிஷ்ரா மற்றும் விவேக் மிஷ்ரா இருந்துள்ளனர். பெண்ணின் வலிக்கு சிறுநீரக கல்தான் காரணம். அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ரூ.25 ஆயிரம் செலவாகும் என பிரகாஷ் கூறினார். பின்பு, ரூ.20 ஆயிரம் வரை பேரம் பேசி ஒப்பு கொள்ளப்பட்டது.

அடுத்த நாள் யூ-டியூப் பார்த்தபடி பிரகாஷ் அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளார். அப்போது போதையில் இருந்துள்ளார். இதனால், பெண்ணின் வயிற்றில் உள்ள பல்வேறு நரம்புகளை கத்தரித்து இருக்கிறார். இதில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அடுத்த நாள் அதிக வலியால் அலறி, துடித்த ராவத் உயிரிழந்து விட்டார்.

இதுபற்றி பகதூர் போலீசில் புகார் அளித்து உள்ளார். போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ராவத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிளினிக் உரிமையாளர்கள் இருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி உயரதிகாரி அமித் சிங் பதூரியா கூறும்போது, சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், கிளினிக்கில் ஆய்வு செய்ய சென்றோம். கிளினிக்கில் இருவரும் இல்லை. அவர்கள் தப்பியோடி விட்டனர். அவர்களை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்தனர்.

உத்தர பிரதேசத்தில், போலி டாக்டர் போதையில் யூ-டியூப் பார்த்தபடி அறுவை சிகிச்சை செய்ததில் பெண் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து