புதுடெல்லி,
இந்திய கடற்படை, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் சமீபத்திய நடவடிக்கையாக முற்றிலும் பெண் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று, வடக்கு அரபிக்கடலில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரலாறு படைத்து இருக்கிறது.
அந்தவகையில் குஜராத்தின் போர்பந்தரில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் இருந்து டோர்னியர்-228 ரக விமானம் மூலம் 5 பெண் அதிகாரிகள் நேற்று முன்தினம் இந்த கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். லெப்டினன்ட் கமாண்டர் ஆஞ்சல் சர்மா தலைமையிலான இந்த குழுவில் ஷிவாங்கி, அபூர்வா கைத் (இருவரும் விமானிகள்), பூஜா பாண்டா, பூஜா ஷெகாவத் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இந்த பணி தனித்துவமானது எனவும் கடற்படையின் விமானப்பிரிவில் உள்ள பெண் அதிகாரிகள் அதிகப் பொறுப்பை ஏற்கவும் இது வழிவகுக்கும் என கடற்படை செய்தி தொடர்பாளர் விவேக் மத்வால் தெரிவித்து உள்ளார்.