மலப்புரம்,
கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னானியை சேர்ந்தவர் பாத்திமா (வயது 22). இவரது கணவர் முகமது (24). இவர்களுக்கு கடந்த 1% ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. முகமது போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே அவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார்.
இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று முகமது. பாத்திமா இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முகமது தனது மனைவியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி பாத்திமா உயிரிழந்தார். இந்த கொலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக, பாத்திமா உடலை முகமது பொன்னானி துறைமுகம் அருகே கடற்கரையில் வீசி உள்ளார்.
இதற்கிடையே கடற்கரை மணலில் இறந்து கிடந்த ஒரு பெண்ணின் காலை தெரு நாய்கள் கடித்து இழுத்ததை மக்கள் பார்த்தனர். உடனே இதுகுறித்து பொன்னானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தபோது, பாத்திமாவின் உடல் என்பது தெரியவந்தது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடற்கரையில் மனைவியின் உடலை வீசிய முகமது. அதன் மீது மணலை குவித்து மூட முயன்றதாக தெரிகிறது. விசாரணையில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பாத்திமாவை முகமது கழுத்தை நெரித்து கொன்று கடற்கரையில் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, முகமதுவை போலீசார் கைது செய்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.