புதுடெல்லி,
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இதில் 125 வயதான சுவாமி சிவானந்தாவுக்கு யோகாவிற்காக பத்ம ஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது.
இதற்காக ராஷ்டிரபதி பவனுக்கு வெறும் காலில் வந்த அவர், விருது பெறுவதற்கு முன்பாக பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி இருவரின் முன்பு விழுந்து வணங்கி இருவரையும் சங்கடத்திற்கு உள்ளாக்கினார். பின்னர் அவர் விருதினை பெற்றுக்கொண்டார். அப்போது அங்குள்ள அனைவரும் கரகோஷம் எழுப்பினர்.
சுவாமி சிவானந்தா தனது வாழ்க்கையை மனித சமுதாயத்தின் நலனுக்காக அர்ப்பணித்தவர் ஆவார். ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு அவர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு உதவிகளை செய்துவரும் அவர், இப்போதும் அதே பணியை தொடர்கிறார். நோயற்ற வாழ்க்கைக்கு எளிய வாழ்க்கை முறை, உடற்பயிற்சி மற்றும் பல்வேறு யோகா பயிற்சியை மேற்கொள்ள ஊக்குவிக்கிறார்.