புதுடெல்லி,
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர விரும்பும் இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா மருத்துவ விசா வழங்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் லாகூர் நகரைச்சேர்ந்த உசைர் ஹுமாயுன் என்பவர் தனது மூன்று வயது மகளுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்தியா வர விசா வழங்குவதற்கு உதவ வேண்டும் என்று சுஷ்மா சுவராஜிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று மருத்துவ விசா வழங்கியிருப்பதாக சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் குழந்தையின் உடல் நலம் விரைவில் தேறவும் இறைவனிடம் பிரார்த்திப்பதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தனது தந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்தியா வர விசா வழங்க வேண்டும் என்று கோரிய நூர்மா ஹபிப் என்ற மற்றொரு பாகிஸ்தான் பெண்ணின் கோரிக்கையையும் ஏற்ற சுஷ்மா சுவராஜ், இந்தியா விசா வழங்கி உதவும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் தந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று நீண்ட நாள் வாழ விரும்புவதாகவும் தனது டுவிட்டரில் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் கசப்புணர்வு உள்ள போதிலும், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற விரும்பும் ஏராளமான பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளார்.