புதுடெல்லி,
பாகிஸ்தானில் கர்டார்பூர் சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. இங்கு சென்று சீக்கிய யாத்ரீகர்கள் இறை வணக்கம் செலுத்துவர். இது சர்வதேச எல்லைக்கு 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தியாவில் உள்ள தேரா பாபா நானக் என்ற பகுதியில் இது தெளிவாக தெரியும். அங்கு செல்ல முடியாத பக்தர்கள் இங்கிருந்தபடியே தங்களது இறை வணக்கத்தினை செலுத்துவார்கள்.
இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. பொது சபையில் இந்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி மெஹ்மூத் குரேஷி மற்றும் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசுவார்கள் என தகவல் வெளியானது.
இதுபற்றி, மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சுஷ்மா சுவராஜ் கர்டார்பூர் சாஹிப் விவகாரம் பற்றி இந்த கூட்டத்தில் எழுப்புவார் என கூறினார்.
அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத தலங்களுக்கு சென்று வருவதற்கான விதிகளுக்குள் சீக்கிய புனித தலத்தினை சேர்க்கும்படி பாகிஸ்தானிடம் கடந்த காலங்களில் பலமுறை கூறியுள்ளோம். எனினும், இந்தியாவின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் இன்னும் பதிலளிக்கவில்லை.
இந்த விவகாரத்தினை பாகிஸ்தான் கவனத்தில் கொண்டுள்ளது என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை என அவர் கூறினார். ஆகவே இந்த விவகாரத்தினை குரேஷியிடம் பேசும்பொழுது சுஷ்மா எழுப்புவார் என கூறியுள்ளார்.
கடந்த மாதம் நடந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில், பஞ்சாப் அரசில் மந்திரியாக உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து கலந்து கொள்ள சென்றார். அதன்பின் அவர் கூறும்பொழுது, இந்தியாவில் உள்ள சீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்டார்பூர் சாஹிப் வழியை திறந்து விடுவதற்கான பணிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது என அந்நாட்டு ராணுவ தளபதி பஜ்வா என்னிடம் கூறினார் என செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிலையில் சுவராஜை கடந்த திங்கட்கிழமை சித்து சந்தித்து இந்த விவகாரம் பற்றி பாகிஸ்தானிடம் பேசும்படி கேட்டு கொண்டார்.