புதுடெல்லி,
காவிரி மேலாண்மை வாரியம், கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் போராட்டம் நடந்து வருகிறது. தமிழக விவசாயிகளின் இந்த போராட்டம் நேற்று 27வது நாளை எட்டியது.
போராட்டக்களத்தில் விவசாயிகள் நாராயணசாமி (85) மற்றும் பெரியசாமி ஆகியோர் தண்ணீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களுடன் மேலும் 3 விவசாயிகளும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நேற்று காலை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
இந்த சந்திப்பு சுமார் மணி நேரம் நடந்தது. அதன்பின்பு அய்யாக்கண்ணு உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் மாலையில் நடந்த அகில இந்திய விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:
அரியலூர் மாவட்டம் மருவியாறு முதல் கரைவெட்டிக்குளம் வரை புதிதாக வாய்க்கால் அமைக்க வேண்டும், விருதுநகர் மாவட்டம் குண்டாற்றில் இருந்து திருச்சுழி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு வசதியாக குண்டாற்றில் தடுப்பு அணை கட்ட வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்தோம்.
விவசாயிகளுக்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று முதல்அமைச்சர் எங்களிடம் கூறினார். பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் எங்களிடம் தெரிவித்தார்.
அகில இந்திய விவசாயிகள் கூட்டத்தில் 29 மாநில விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழக விவசாயிகளை பிரதமர் பார்க்காமல் இருப்பது விவசாயிகளை கேவலப்படுத்தும் செயலாகும்.
தமிழக விவசாயிகளுக்கு ஏதாவது பிரச்சினை ஆனால் இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.