புதுடெல்லி,
தமிழகத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்த பொதுநல வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் நரசிம்மா, இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவி செய்யும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள சங்கர நாராயணன், தமிழக அரசு தரப்பில் டி.ஆர்,சிவகுமார், மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆகியோர் ஆஜரானார்கள்.
விசாரணை துவங்கியதும் கடந்த மே மாதம் இந்த சம்பவம் பற்றி சங்கர நாராயணன் கோர்ட்டுக்கு வழங்கிய ஆலோசனை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கூடுதல் அறிக்கையை தமிழக அரசு கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து வழக்கின் மீதான விசாரணையை நீதிபதிகள் 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.