பெங்களூரு,
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை. இவர் மெக்கானிக்கல் என்ஜினீரியங் மற்றும் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். 2011-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வு பெற்றார். கர்நாடக மாநிலம், உடுப்பி கார்கலாவில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். பின்னர் சிக்மகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆனார்.
ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினார். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து வந்ததன் மூலம் பொதுமக்களால் கர்நாடக சிங்கம் என்று அழைக்கப்பட்டார். தற்போது பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வந்தார். இங்கு பல்வேறு வழக்குகளை திறமையாக கையாண்டார். இரவு நேரங்களில் ரவுடிகளை பிடித்து எச்சரிக்கை விடுத்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுத்தார். பணிச்சுமையால் அவதிப்பட்ட போலீசாருக்கு கண்டிப்பாக வாரவிடுமுறை அளிக்கும் நடைமுறையை அமல்படுத்தினார்.
இந்தநிலையில் அவர் திடீரென பதவி விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூவிடம் வழங்கினார்.
நேற்று அவர் முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்து ராஜினாமா குறித்து பேசி விட்டு வந்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்-மந்திரி கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
பதவி விலகியுள்ள அண்ணாமலை, அடுத்து அரசியலில் குதிக்கிறார்.
இதை பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்தப்பதிவில், பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலையிடம் பேசினேன். அவர் இன்று (அதாவது நேற்று) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் அரசியலில் நுழைகிறார். மனதுக்கு பிடித்து, கடும் முயற்சியால் பெற்ற வேலையை விட்டு செல்ல துணிச்சல், தைரியம் வேண்டும். சில சாதனையாளர்கள், இளைஞர்கள் அரசியலில் நுழைவது மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.